Blog

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு

Tamil Language

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு

சுப்ரமணிய பாரதியார் பன்முகத் தன்மை பொருந்திய தமிழ் கவிஞர். சுதந்திர போராட்டம் தொடங்கி பெண் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், என பல விஷயங்களுக்கு போராடினார். கவிதைகள் மூலம் தேசிய‌ எண்ணங்களை அனைவர் மனதிலும் விதைத்தார். நூறு வருடங்கள் கடந்தும் இன்றும் தமிழ் மனங்களில் கவிதைகள் மூலம் வாழ்ந்து வருபவர். தமிழ் மீதும் தாய் மொழி மீதும் பெரும் பற்று கொண்டவர். தமிழ் மொழியை “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடுவதில் அவரின் தமிழ் பற்று தெளிவாக வெளிப்படுகிறது. தமிழகம் கடந்து அவரின் கவிதைகள் தேசிய உணர்வை விதைத்து அனைவரையும் ஒன்றுபடுத்தியதால் அவர் புகழ் தேசம் முழுவதும் பரவி, அவரை தேசிய கவியாக உயர்த்தியது.

பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தொடங்கி விடுதலைப் போராட்டத்திலும், பெண்கள் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

சுப்ரமணிய பாரதியின் பிறப்பு

சின்னசாமி ஐயர்‍ இலட்சுமி அம்மாளுக்கு மகனாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி (தற்போது தூத்துக்குடி) மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் பதினொன்றாம் தேதி அன்று சுப்ரமணிய பாரதியார்  பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். சுப்பையன் என்றும் அழைக்கப்பட்டார். அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது, அதாவது 1887-ஆம் வருடம் இலக்குமி அம்மாள் மறைந்தார். பின், அவரின் பாட்டி பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். பின் இவரின் தந்தை, சின்னசாமி ஐயர் பதினாறு வயதிருக்கும் போது இறந்தார். ஆனால் அதற்கு முன், பாரதிக்கு பதினைந்து வயதிருக்கும் போது, செல்லம்மா என்பவரை மணமுடித்து வைத்தனர்.

பாரதியாரின் மொழிப்புலமை

தன் தந்தையை இழந்த பின்பு, காசி சென்று அங்குள்ள அலகாபாத் பல்கலைக் கழகத்தில் கற்றார். இதனால் தமிழ் மொழியை கடந்து ஆங்கிலம், இந்தி, சமஸ்கிரதம், வங்காளம், என பல மொழிகளையும் கற்று கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவ்வளவு மொழிகள் கற்ற பின்பும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடியது, அவரின் தமிழ்ப்பற்றையும், தமிழ் மொழியின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. 

பாரதியார் பெயர் காரணம்

பாரதி சிறு வயது முதலே தமிழ்ப்பற்றும், கவிப்பாடும் புலமையும் மிகுதியாக பெற்றிருந்தார். பள்ளியில் படித்து கொண்டிருந்த காலம் தொட்டே கவிதை எழுதி வந்தார். பதினொரு வயதில் எட்டயபுரம் அரண்மனையில் தனது கவிப்பாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இதை கண்டு வியந்த மன்னர், அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அதற்கு சரஸ்வதி தேவியின் கடாக்ஷ்ம் பெற்றவர் என்று பொருள் அன்றிலிருந்து அவருக்கு “சுப்பிரமணிய பாரதி” என்ற பெயர் வந்தது. 

திருமணத்திற்கு பின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அவருக்கு வறுமை ஏற்பட்டது. பொருளுதவி கோரி எட்டயபுரம் அரண்மனைக்கு கடிதம் அனுப்பினார். 1898‍ம் ஆண்டு சிறிது காலம் எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். பின்பு படிப்பிற்காக‌ காசி சென்றார். அரசரின் அழைப்பை ஏற்று காசியிலிருந்து திரும்பிய பின்பு அரசவைக் கவிஞராக சிறிது காலம் பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய தொண்டு

“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி ”

என்று சொன்னார் பாரதி. பாரதியாரின் இலக்கியப் பணி அளப்பரியது. இவரது எழுத்துக்கள் முதன்முதலாக 1903ம் ஆண்டு அச்சில் வந்தது. பாரதியின் படைப்புகளில் முக்கியமான சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம். 

  1. குயில் பாட்டு
  2. சுயசரிதை 
  3. ஞானப் பாடல்கள்
  4. தேசிய கீதங்கள்
  5. தோத்திரப் பாடல்கள்
  6. பகவத் கீதை பேருரை
  7. விடுதலைப் பாடல்கள்
  8. விநாயகர் நான்மணிமாலை
  9. பாஞ்சாலி சபதம்
  10. பாரதி அறுபத்தாறு
  11. பதஞ்சலியோக சூத்திரம்
  12. நவதந்திரக்கதைகள்
  13. கண்ணன் பாட்டு
  14. பாப்பா பாட்டு
  15. ஹிந்து தர்மம்
  16. சின்னஞ்சிறு கிளியே
  17. புதிய ஆத்திசூடி
  18. ஆறில் ஒரு பங்கு
  19. தோத்திரப் பாடல்கள்
  20. விடுதலைப் பாடல்கள்
  21. ஆறில் ஒரு பங்கு 
  22. பொன் வால் நரி
  23. சந்திரிகையின் கதை
  24. ஞானரதம்
  25. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்ககு

பாரதியாரின் சிறப்பு பெயர்கள்

பாரதியாரின் கவிதைகள் பெரும் வரவேற்பை பெற்றன. தேசியம், இறையாண்மை, தமிழ்மொழி, பெண் விடுதலை, சாதி எதிர்ப்பு, குழந்தைகள் என சமூகம் சார்ந்த பல சீர்திருத்தங்களை முன்னிறுத்தி இருந்ததால் இவர் முண்டாசு கவிஞன், தேசியக் கவி, மகாகவி, சகதிதாசன், விடுதலைக்கவி, மக்கள் கவிஞர், எனப் பல புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டார்.

பாரதியாரின் பத்திரிக்கை பணி

சுப்பிரமணிய ஐயர் நடத்தி வந்த‌ சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையில் துணை ஆசிரியராக‌ பொறுப்பு வகித்தார். 1904‍‍ ஆம் ஆண்டு முதல் 1906 ஆம் ஆண்டு வரை அப்பணியை தொடர்ந்தார். பின்னர் சக்கரவர்த்தினி என்ற மாதந்திர பத்திரிக்கையிலும், இந்தியா என்ற வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். எம்.பி.டி. ஆச்சாரியாவுடன் சேர்ந்து பாலபாரதம் (Bala Bharathஅம்) என்ற இதழிலும், சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். 

பின்பு பாண்டிச்சேரியில் இருந்த போது விஜயா என்ற தமில் இதழையும், சூர்யோதயம் என்ற வார இதழையும் ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை மீறி நடத்தினார். மேலும் தர்மம், கர்மயோகி, என பல பத்திரிக்கைகளிலும் பணியாற்றினார். இந்தியா, விஜயா போன்ற இதழ்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் தொண்டு

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்”

என்று இந்திய திருநாடு சுதந்திரம் அடைவதற்கு பல காலம் முன்பே பாடியவர். சுதந்திர போராட்டத்தில் பாரதியின் எழுத்துக்களும், கவிதைகளும் இந்திய மக்களை ஒன்றுபடுத்தின. 

“கத்தியின்றி ரத்தமின்றி  

யுத்தமொன்று வருகுது 

சத்தியத்தின் நித்தியத்தை 

நம்பும்யாரும் சேருவீர்”

என சுதந்திர உணர்ச்சி பிளம்பாக பெருக்கெடுத்து ஓட வைத்தன. இந்தியா என்ற பத்திரிக்கையில் தன் கவிதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமாகவும் சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார். பின்னர் இந்த பத்திரிக்கை ஆங்கிலேயே அரசால் தடை செய்யப்பட்டது. அதோடு அவரை சிறையிலும் அடைத்தது. 

“மண்ணும் இமயமலை எங்கள் மலையே

மாநிலமீதிதுபோல் பிறிதிலையே

இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே 

பாரத நாடு பழம்பெரும் நாடே;

பாடுவம் இதை எமக்கில்லை ஈடே!”

என்று நாட்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டி பாடினார். 

கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்களோடு நெருங்கிய நட்பு கிடைத்தது.  தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் கல்கத்தாவில் நடந்த‌ மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.  

பாரதியாரின் கட்டுரைகளும், கவிதைகளும், கேளிக்கை சித்திரங்களும் மக்களை பெரிய அளவில் ஒருங்கிணைத்தன. இதனால் ஆங்கிலேயே அரசாங்கம் இந்தியா பத்திரிக்கையை தடை செய்ததோடு, பாரதியாருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்து தப்பிக்க பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆளுமையின் கீழிருந்த பாண்டிச்சேரியில் அடைக்கலம் தேடினார். தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து பத்திரிக்கை பிரசுரிக்க தொடங்கினார். ‘இந்தியா’ என்ற பத்திரிக்கை பாண்டியிலிருந்து வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது. இதனை அறிந்த பிரிட்ஷ அரசாங்கம், இதை புதுவையிலும் தடை செய்தது. அந்த சமயத்தில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் எனப் பல புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார். மேலும், பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார் பாரதி!

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; 

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை 

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் 

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!”

என்று புதுமை பெண்களின் குணாதிசியத்தை பற்றி எழுதினார். “பாரதி கண்ட புதுமைப் பெண்” என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையான பெண்ணியவாதியாக வாழ்ந்தார். சதி, குழந்தை திருமணம், பெண்களுக்கு சம உரிமை என பல சீர்த்தங்களுக்காக குரல் கொடுத்தார்.

பாரதியாரின் இறப்பு

1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் எதிர்பாராத‌ விதமாக கோயில் யானை அவரை தூக்கி வீசி விட்டது. இதனால் அவர் தலையிலும் கை கால்களிலும் காயம் ஏற்பட்டது. இதனால் நோய்வாய்ப்பட்டார். இதனுடன் அவருக்கு வயிற்று கடுப்பும் ஏற்பட  1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவ்வுலகை விட்ட மறைந்தார்.

அவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதிக்கு மணிமண்டபமும், திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த வீடுகள் ‍ எட்டயபுரத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் இருந்த வீடுகள் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Talk to a Tamil language advisor​

Know our curriculum, offers and tutors.

Also ask for the free demo class.

Want to Know More?

Fill the Form to know more details on the course